திருவாரூரில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருவாரூர் மட்டுமின்றி நாகையிலிருந்தும் அதிகளவில் நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் நோயாளிகளுக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் சிரஞ்ச், ஊசி, மருந்து பாட்டில், உடற்கூறாய்வு செய்வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி பிணவறைக்கு அருகே உள்ள திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. பிணவறைப் பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள், இந்த மருத்துவக் கழிவுகளின் துர்நாற்றம் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த மருத்துவக் கழிவுகளை எரிப்பதால், அதிலிருந்து வரக்கூடிய புகையானது மக்களுக்கு மூச்சுத் திணறலையும், சுவாச நோய் கோளாறுகளையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய்களுடன் திறந்த நிலையில் கிடப்பதால், அங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதையடுத்து கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் நோயாளிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறினர்.