திருவாரூர் மாவட்டம் வாளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, இவருடைய மனைவி நதியா. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்திவரும் இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
வள்ளலார் பற்று
கணவன், மனைவி இருவரும் வள்ளலார் மீது, அதீத பற்றுகொண்டவர்கள். ’ஏழைகளின் பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம்’ என்ற வள்ளலாரின் சொல்லுக்கு ஏற்ப, கடந்த ஒரு வருடமாக ஏழை, எளிய மக்களின் பசியை இவர்கள் போக்கிவருகின்றனர்.
நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பசியில் வாடுவோருக்கு நாள்தோறும் மதிய உணவை இலவசமாக கொடுப்பதை, இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தற்போது ஊரடங்கால் வருமானம் இல்லாதபோதிலும், இவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு, பசியால் வாடுவோரின் வயிற்றை நிறையவைக்கின்றனர் இந்தத் தம்பதியினர்.
காலை 8 மணிக்கு சமையல் பணியைத் தொடங்கும் தம்பதி, மதியம் 12 மணிக்குள் சாம்பார், ரசம், மோர், பொரியல் போன்ற அறுசுவை உணவை சமைத்து முடிக்கின்றனர்.
அதன்பின்னர் அவற்றை திருவாரூர் அரசு மருத்துவமனை முன்பு வரக்கூடிய பொதுமக்களுக்கும், புறநோயாளிகளுக்கும் வழங்குகின்றனர்.