திருவாரூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, சம்பா பயிரிடும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இவர்கள் பணிகள் தொடங்கிய நாள்முதலே உரத் தட்டுப்பாடு, ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல், இலை சுருட்டுப் புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். இந்தப் பிரச்னைகளையெல்லாம் கடந்துதான் சம்பா பணிகளை மேற்கொண்டு அறுவடைக்கு தயாராகினர்.
இந்நிலையில், நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் தொடர்ந்து பெய்த மழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் முற்றிலுமாகச் சாய்ந்தன. நெற்கதிர்களைச் சூழ்ந்து மழை தண்ணீர் காணப்படுவதால், அறுவடைப் பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.