திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு உரிய திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு செயல்பட்டுவருகிறது.
குடியிருப்புகளுக்கு அருகே சேமிப்புக் கிடங்கு அமைந்திருப்பதால் இங்கு லாரிகளில் நெல் மூட்டைகள் கொண்டுவந்து சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், பகல், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் வடக்கு தெரு பகுதிக்கு வந்து செல்கிறது. இதே பகுதியில் சிறுவர்களுக்கான அங்கன்வாடி மையம், பள்ளிக்கூடம் ஆகியவையும் இருப்பதால் சிறுவர்களும் மாணவர்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர்.
இந்தச் சாலை, போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாத நிலையில் குண்டும்குழியுமான நிலையிலுள்ளது. இதனிடையே, கனரக வாகனங்களால் பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு விபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் கனரக வாகனம் வந்து செல்வதால் ஒலி, காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வயதானவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.