40 ஆண்டுகளுக்கு பிறகு 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சந்தோஷ் டிராபி இறுதிப் போட்டிக்கும், 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. தமிழ்நாடு ஆடவர் கால்பந்து அணியைப் பற்றியே நினைவில் கொள்ளாத அனைவருக்கும், மகளிர் அணியின் வெற்றிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம் தான்.
2019-20ஆம் ஆண்டுக்கான இந்திய மகளிர் கால்பந்து லீக் போட்டிகளில் கேரளா கோகுலம் அணி வெற்றிபெற்றது. அதில் ஆடிய பெரும்பாலான வீராங்கனைகள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் அதே தொடரில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்றிருந்த சேது கிளப் அணியில் அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.
சமீபத்திய தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் செயல்பாடுகளை கவனித்தவர்களுக்கு அவர்களின் வளர்ச்சி நிச்சயம் தெரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால், மகளிர் கால்பந்திற்காக தயாராகும் தமிழ்நாடு வீராங்கனைகள் பலரும் புல்தரையில் ஆடி பயிற்சி இல்லாதவர்கள். இதுதான் நமது வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் கடைசி நேரத்தில் அடையும் தோல்விகளுக்குக் காரணம்.
இதே மைதானம் தொடர்பான பிரச்னையை தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளும் எதிர்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் முடிந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளில் முதலிடம், முதலமைச்சர் கோப்பையில் தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடம், பிரதமர் கோப்பையில் மூன்றாம் இடம், பீச் கால்பந்து தொடரில் முதலிடம் என வெற்றிபெற்று அப்பள்ளியின் கால்பந்து அணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தேசிய அளவிலான தொடரில் தமிழ்நாடு முழுவதும் பங்கேற்றிருந்த தனியார் பள்ளிகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்ட அணி வென்று பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இந்த அணியிலிருந்து நான்கு மாணவிகள் இப்போது தேசிய ஜூனியர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
கால்பந்தில் இந்தப் பள்ளி அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரே நாளிலோ, ஒரே வருடத்திலோ கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், 2012ஆம் ஆண்டுக்கு முன் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லை. அதன் பிறகு பகுதிநேர உடற்பயிற்சி ஆசிரியராக முத்துக்குமார் என்பவர் வந்துள்ளார்.
உடற்பயிற்சி ஆசிரியராக வந்தவர் மாணவர்களின் திறனை கண்டறிந்து அவருக்கு பிடித்த கால்பந்து பயிற்சியை அவர்களுக்கு கொடுத்துள்ளார். நாளாக நாளாக மாணவிகளின் ஆர்வமும், விளையாடும் திறனும் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.