திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு வெளிமாவட்ட, வெளிமாநில நெல்லைக் கொள்முதல் செய்வதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வெளிமாநில நெல் கொள்முதல் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் சேதுராமன்
திருவாரூர்: தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வெளிமாநில நெல் கொள்முதல் செய்வதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர், “தற்போது குறுவைச் சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்றுவருவதால், குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குப் பின்னரே நேரடி நெல் கொள்முதல் செய்வதற்கான தேவை ஏற்படும். ஆனால், தற்போது வெளி மாவட்டத்திலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் இங்கு நெல் கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.
ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் தற்காலிகமாக மூட வேண்டும்” என்றார். இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.