காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தான் பிரதானத் தொழில். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரும்பாலானோர் மேட்டூர் காவிரி நீரையும், மழைநீரையும் நம்பியே அதிக அளவில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள மேலப்பேட்டை, கீழே பேட்டை, பழவர்ணக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.
ஓடம்போகியாற்றிலிருந்து பிரிந்து வரும் சுக்கனாறு வாய்க்கால் காவிரி நீரை நம்பி, இந்த மாவட்ட விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏனென்றால், மேட்டூர் அணை தண்ணீர் வராததாலும் உரிய நேரத்தில் மழை பெய்யாமல் போனதாலும் இந்தப் பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர்.
விவசாயத்தையே பிரதானமாக நம்பி இருக்கும் சுக்கனாறு வாய்க்கால் சரியாக தூர்வரப்படாமல் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பி வழிகின்றது. திருவாரூர் நகராட்சியில் கொட்டப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகளால் சாக்கடையாக மாறி, வாய்க்கால் முழுவதும் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் கொஞ்சமும் இல்லாமல் போனது.