திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது பருத்தி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பருத்திக்கு உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இதற்கிடையில் திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது.
இதில் இந்திய பருத்தி கழகம் சார்பில் 120 குவிண்டால் மட்டுமே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 600 குவிண்டால் அளவிலான பருத்தி தனியார் வியாபாரிகள் ஏலம் கேட்டுள்ளனர்.
இதில் 30 முதல் 31 ரூபாய் வரை மட்டுமே ஒரு கிலோ பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், இந்திய பருத்தி கழகம் சார்பில் 52 முதல் 55 ரூபாய் வரை பருத்தி ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, நேற்று திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் மூங்கில்குடி என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மிகக் குறைந்த அளவில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறி திடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருவாரூர் -மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகள் மீது நன்னிலம் காவல்துறையினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபடுதல், காவல் துறையினரின் அனுமதி பெறாமல் போராட்டம் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் சாலை மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.