திருவாரூர்:வாலி திரைப்படத்தில் நடிகர் விவேக், தாடி பாலாஜி நகைச்சுவை காட்சி ஒன்று மிகவும் பிரபலம்.அதில் விவேக் இலவச மருத்துவம் பார்க்கப்படும் என்று சொன்னவுடன் தாடி பாலாஜி வயிறு வலி என்று தொடங்குவார். பின்னர் உடலில் அனைத்து பாகங்களில் நோய் உள்ளது போல் காட்சி அமைந்திருக்கும்.
இந்த காட்சியை பார்ப்பவர்கள் மனதில் இது நகைச்சுவையாக மட்டுமே பதிவாகியிருக்கும். ஆனால் அதன் வலியை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் வலியும், வேதனையும் புரியும். இதேபோன்று உடலில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் சுமந்து கொண்டு வாழ்கிறான் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன்.
பல்வேறு விதமான பிரச்சனைகளை சுமக்கும் சிறுவன்
நன்னிலம் அருகே உள்ள ஆணைக்கும் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆதித்யன் இளைய மகன் ஜெயதேவ். ஜெயதேவ் பிறந்த இரண்டு மாதங்களில் அதிக காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து உடல்நல குறைவு ஏற்பட்டு சிறுவனுக்கு வலியை உணரும் தன்மை போய்விட்டது.
உடலில் வியர்வையும் வராது, நுனிநாக்கும் கிடையாது. வாய்க்குள் பல் வரிசையும் கிடையாது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்ற வேண்டும் அந்த நிலையில்தான் உள்ளோம் என ஜெயதேவ் பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மேலும் சிறுவனுக்கு இரண்டு கைகளும் வளைந்து காணப்படுகிறது. உடலில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருவதால் அடிக்கடி உடலில் ஈரத்துணி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காலில் அதிக அளவு வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஜெயதேவுக்கு மருத்துவர்கள் காலை அகற்ற வேண்டும் என கூறியதால் சிறுவனின் இடது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டனர். வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் கண்ணீரோடு தம்பதிகள் கோரிக்கை
தற்போது மற்றொரு காலிலும் இதுபோன்ற காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறு வருகின்றனர். ஐந்து லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
ஜெயதேவ் தந்தை பிரபாகரன் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு சிறுவனையும் பார்த்து கொள்ள போதிய வருமானம் இல்லை. என் மகனுக்காக வயலையும் வீட்டையும் அடமானம் வைத்து காப்பாற்றி வரும் நிலையில் தற்போது வலது காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் பணம் இல்லாமல் மன வேதனையில் உள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் எனவே எங்களின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசோ, தனியார் தொண்டு நிறுவனங்களோ உதவி செய்து மருத்துவ செலவுகளை ஏற்று கொள்ள முன்வர வேண்டும் என கண்ணீரோடு தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவர்களது கேரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க :முதலமைச்சரைப் பார்த்தது 'ரொம்ப ஹேப்பி' - சிறுமி ஜனனி