இந்தியா முழுவதும் கரோனா ஒழிப்பு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் முடங்கி உள்ளனர். கிராமப் பகுதிகளில் விவசாய உற்பத்தி முடங்கியுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டாவில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய நாற்று விடப்பட்டு உழவு பணிகள் முடிவடைந்த நிலையில், தொழிலாளர்கள் ஒன்று கூட முடியாததால் நடவுப்பணி முற்றிலும் முடங்கி விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், ”கரோனாவிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டாலும், விவசாயம் நலிவடைவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மாற்று நடவடிக்கை குறித்து அவசர கால நடவடிக்கைகளை மேற்க்கொண்டு தடையின்றி காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி செல்வதற்கான வகையில் நாள்தோறும் மூன்று மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும்.
இதன் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பினை கணக்கீடு செய்து பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் வசூல் முகவர்கள் என்ற பெயரில் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்திவருகிறது.