தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கார் இல்லை கார வீடு இல்லை கையிருப்பிலும் காசு இல்லை' - மக்கள் வேட்பாளராய் களமிறங்கும் மாரிமுத்து - Thiruthuraipoondi CBI candidate Marimuthu

பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் வறுமையிலும் அரசியலுக்கு வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்.

By

Published : Mar 19, 2021, 9:03 PM IST

Updated : Mar 19, 2021, 9:51 PM IST

குடிசை வீடு, கையிருப்பில் 3 ஆயிரம் ரூயாய் பணம், வங்கி கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் இருப்பு, மனைவியின் கையிருப்பில் ஆயிரம் ரூபாய் பணம், மூன்று பவுன் தங்கம் இதைதான் தனது சொத்து மதிப்பாக விருப்ப மனுவில் குறிப்பிட்டுள்ளார் திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து. கூலித்தொழிலாளியான இவர் திமுக கூட்டணி சார்பாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

1994ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் ஆன இவர், 1999 ஆம் ஆண்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளராகவும், 2006ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றிய துணைச் செயலாளராகவும், 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கோட்டூர் ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கிறார்.

பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் வறுமையிலும் அரசியலுக்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய மாரிமுத்து ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "காடுவாகுடி கிராமம்தான் எனது சொந்த ஊர். கல்லூரி வரை படித்துள்ள நான் சாதாரண கூலித்தொழிலாளி. மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து போராடக்கூடிய அனுபவத்தையும் ஆளுமையையும் எனக்கு கம்யூனிஸ்ட் கட்சி தந்திருக்கிறது" என்று மிகவும் நேர்த்தியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மக்களின் வேட்பாளாராய் களமிறங்கும் மாரிமுத்து

தொடர்ந்து, "விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஒடுக்கப்படவர்கள், ஏழை, எளிய மக்ககள் என பல தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். அரசாங்கத்தை சாதாரண மக்கள் பக்கம் திருப்பும் அளவிற்கு எங்களது போராட்டங்கள் வலுவாக அமைந்து தாக்கத்தை ஏற்படுத்தின" என்று தெரிவித்த மாரிமுத்துவின் அடையாளங்கள் எளிமையும் வலிமையும் மட்டும்தான்.

தேர்தல் பரப்புரையின் போது, கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருக்கும் திருத்துறைப்பூண்டியை அதிமுக கோட்டையாக மாற்றுவோம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது சாத்தியமாகுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, "இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான அடித்தளமுடைய கட்சி. அதேப்போல திமுகவும் செல்வாக்கான கட்சியாக இருக்கிறது. நடைபெற்ற 13 சட்டப்பேரவை தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி 11 முறையும், திமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. அதிமுக ஒரு தடவை கூட வெற்றி பெறவில்லை" என்று தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்துவின் குடும்பம்

பணப்பலம் இருப்பவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் வறுமையில் வாடும் உங்களுக்கும் சீட் கிடைத்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் எனும் கேள்விக்கு, "நான் ஒரு சாமானியன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதற்காக பல கிராமங்களிலிருந்தும் எங்களுக்கு நீதி கொடுக்கிறார்கள். வாக்களிக்கிறோம் என்று உத்தரவாதமாக சொல்கிறார்கள். அதனால் பணப் பலமும் அதிகார பலமும் மக்கள் சக்தியின் முன்னால் எங்களை ஒன்றும் செய்து விடாது. நிச்சயம் வெற்றி மக்களின் பேரதரவு கொண்ட எங்கள் கூட்டணிக்கு தான்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கஜா புயலின் போது சேதமடைந்த பல வீடுகளில் இவரது வீடும் ஒன்று. அப்போது அரசாங்கமும் சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து முதல்கட்டமாக 18 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர முன்வந்தது. அந்த லிஸ்டில் காடுவாகுடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் பெயர் இல்லை. அவர் ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்பதற்கு உடனே தனக்கு கிடைத்த வாய்ப்பை அவருக்காக விட்டுக்கொடுத்து இன்றளவும் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாசில்லா மாரிமுத்து. பலருது மனங்களை ஈர்த்த மாரிமுத்து இந்த தேர்தலில் வாக்குகளையும் ஈர்ப்பாரா? மே இரண்டாம் தேதி விடை.

Last Updated : Mar 19, 2021, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details