திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கடியாசேரி பகுதியைச் சேர்ந்த அதிமுக மூத்த வழக்கறிஞர் சட்டப்பேரவைத் தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தயாளனின் குடும்பத்தினருக்கும், வழக்கறிஞர் சுரேஷ்குமார் குடும்பத்தினருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு நிலவிவந்தது.
இந்நிலையில் தயாளன் குடும்பத்தினர் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் சுரேஷ்குமார் மீது சாணியைக் கரைத்து ஊற்றி அவமானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில் சுமார் 2 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தயாளனை பழிவாங்கும் நோக்கில் அவருடைய கூரை வீட்டை கூலிப்படைகளை வைத்து முற்றிலும் கொளுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கூலிப் படைகளை ஏவி கொலைசெய்யும் நோக்கத்தோடு நடந்துகொண்டதாக சுரேஷ்குமார், அவரது மகன் சிவக்குமார் இருவர் மீதும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் தயாளன் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதன்பேரில் விரைந்துசென்ற காவல் துறையினர் சுரேஷ்குமார், சிவக்குமார் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சுரேஷ்குமார் கைதாகிய சம்பவத்தை அறிந்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திருத்துறைப்பூண்டி பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரிப்பு!