திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கை கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்புக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி அளவிலான மகளிர் குழுவிற்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 147 குழுவிற்கு ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் நிதியை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'விவசாயிகளுக்குத் தேவையான உரம் கையிருப்பில் உள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை உரத் தட்டுப்பாடு இல்லை. அதிக விலைக்கு உரங்களை விற்கும் உரக் கடைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். ஆகவே ஊழியர்கள் அவர்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறேன்.