திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட வண்டாம்பாளை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின்போது, அம்மன் ஊர்வலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால், திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இரு தரப்பினக்குமிடையே இணக்கம் ஏற்படாததால் சாமியை வழிபட தடை விதித்து, ஏப்ரல் 13ஆம் தேதி கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த நவம்பர் 21ஆம் தேதி, திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர், காவல் நிலைய ஆய்வாளர், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி இன்று காலை எட்டு மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மாரியம்மன் கோயில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.