திருவாரூர் மாவட்டம் முழுவதும் புரெவி புயல் காரணமாக கடந்த 5 நாள்களுக்கு மேலாக மேலாக பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து பொது மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள பண்ணைநல்லூர் கிராம பகுதிகளின் நான்கு புறமும் வயல்கள் சூழ்ந்து நடுவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நண்டலாற்றில் ஏற்பட்ட உடைப்பால் அப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து மின் கம்பிகளும் தாழ்வாக தொங்குவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் செல்லும் நடைபாதையில் மலைப்பாம்பு புகுந்ததால் மூன்று நாள்களாக அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்குகின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கும் தகவலளித்தும் அலுவலர்கள் வரவில்லை. மழை நீர் சூழ்ந்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் எந்த ஒரு அரசு அலுவலரும் தங்கள் பகுதிகளுக்கு வரவில்லை.