திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 16) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர், ஆளுநரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சட்டரீதியான போராட்டத்தில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று வாயை அடைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது. குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது" என்றார்.