தமிழ்நாட்டில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, அரசின் சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட்டை வரவேற்று டெல்டா பகுதி விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருவாரூர் விவசாயிகள் கூறுகையில்,
காவேரி வடிகால் பகுதிகளை சீரமைத்து அதை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் உணவு பூங்கா அமைக்கப்படும் என்ற திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள பயிர்களை மேம்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. பேருந்துகளில் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுவது பாராட்டுக்குரியது.
காவிரி வெண்ணாறு இணைப்பது சிறப்பான திட்டம். இவைகள் நதிகள் இணைப்புக்கான ஒரு முன்னோடித் திட்டமாக கருதுகிறோம். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது என்றனர்.
இதையும் படிங்க: சரபங்கா திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய விவசாயிகள் கோரிக்கை