தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் பரப்புரையும் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் இறுதிகட்ட வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஸ்டாலின் பேசுகையில், "மக்களவைப் பொதுத்தேர்தலில் நாற்பதிலும் வெற்றிபெறுவோம். அடுத்த மாதம் நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் சேர்த்து 22 தொகுதிகளிலும் வெற்றி பெற உள்ளோம். எனவே பெரும்பான்மை நாம் தான்.
ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில் இந்தத் தேர்தல் மூலம் மோடியும், எடப்பாடியும் காலியாகப் போகிறார்கள். தமிழுக்காக போராடியவர் கருணாநிதி. அவரில்லாமல் நாம் இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளோம். அதேசமயம் கருணாநிதியைப் போல் யாரும் பிறக்கவும் இல்லை, பிறக்கவும் முடியாது. நான் திடீரென்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. படிப்படியாக வளர்ந்தவன்" என்றார்.
முன்னதாக ஸ்டாலின், மோடியையும், எடப்பாடியையும் விமர்சித்துhd பேசியபோது தொண்டர்கள் ஒன்ஸ்மோர் என்று கேட்டவுடன் மோடி சர்வாதிகாரி எனவும் எடப்பாடி ஒரு உதவாக்கரை எனவும் கூறினார்.