சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நேற்று (பிப்.28) நகராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 25 மன்றபொருள் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இந்நிலையில், நகராட்சிப் பகுதியில் குப்பைக்கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை, தகன மேடை பராமரிக்கப்படுவதில்லை, கடந்த ஓராண்டாக முன்வைக்கப்பட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றிய பின் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை (பிப்.28) முதல் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே உணவு சாப்பிட்டு, உறங்கினர். இந்நிலையில் உள்ளிருப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (மார்ச் 1) தொடர்கிறது. சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நகர்மன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு, சீர்காழி நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: வருமான வரித்துறைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றார் ஓபிஎஸ்