திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள சிக்கல் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் 30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலைகளைதான் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்தச் சாலையும் பெயர்ந்து, இருபுறமும் செடிகள் சூழ்ந்து, பாதசாரிகள் நடப்பதற்குக் கூட தகுதியற்ற சாலையாக மாறியுள்ளது.
இந்தச் சாலையை சீரமைக்க பலமுறை அரசு அலுவலர்களிடமும், அமைச்சரிடமும் தாங்கள் வலியுறுத்தியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் செல்லும் அவர்கள், பின்னர் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
சாலை வசதியில்லாமல் தவிக்கும் சிக்கல் மக்கள் இருசக்கர வாகனங்கள் செல்வதற்குக் கூட பயனற்றதாக இச்சாலை மாறியுள்ளதாக வேதனைத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவசரத்திற்கு மருத்துவமனைக்கு விரைந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், ஆம்புலன்ஸும் இக்கிராமத்தின் உள்ளே வரத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
சேதமடைந்து காணப்படும் சாலை சாலை வசதிகள் இன்றி தாங்கள் அனுபவித்து வரும் சிரமங்களைக் குறித்து பேசிய மூதாட்டி அமுதா, "எனக்கு 60 வயது. முன்னாடி இந்த ஊர் எப்புடி இருந்துச்சோ அதே மாதிரி தான் இன்னைக்கும் இருக்கு. ஒரு சீர்திருத்தமும் இந்த ஊர்ல நடக்கல. ஓட்டு வாங்க வர்றாங்களே ஒழிய எந்தச் சீர்திருத்தமும் பண்ணல. இந்த ஊர்ல 100 பிரசவம் வரை நான் பார்த்திருப்பேன். வண்டி, வாகனம் போக வசதி இல்லாததால அந்த பிள்ளைகள நான் வயித்துல இருந்து பிடுங்கிப் போட்டிருக்கேன். ஓட்டு வாங்க கூழைக்கும்பிடு போட்டு கூட்டமா வருவாங்க. வர்ரவங்களும் ரோடு போட்டுத் தர்றோம். தண்ணி வசதி செய்து தர்றோம்னு சொல்றாங்க. ஆனா எதுவும் செய்யல" என வேதனைத் தெரிவித்துள்ளார்.
கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் தங்களது துயரைத் துடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று சிக்கல் கிராம மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு இனிமேலும் தாமதிக்காமல், அந்தச் சாலையை சீரமைத்து அவர்களின் துயரைப் போக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
இதையும் படிங்க:தூர்வாரப்படாததால் காணாமல் போன நாட்டாறு பாசனக்கால்வாய்: விவசாயிகள் வேதனை!