உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதே போல இந்தியாவிலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் பயணம் செய்யும் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுப்பப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களிலும் இதேநிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை மையம் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று வரை வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய இருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்ட பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
கரோனா வார்டில் சிகிச்சை பெறும் நபர் இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி சவுதி அரேபிய நாட்டிலிருந்து நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு தற்போது காய்ச்சல் இருமல் அதிகமாக இருப்பதன் காரணமாக தாமாக முன்வந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கரோனா வார்டில் அனுமதித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா சேலன்ஞ் - மோடியின் அடுத்த சரவெடி