தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2019, 7:24 PM IST

ETV Bharat / state

மணல் கொள்ளையால் ஆற்றுப்படுகைகள் அழிந்துபோகும் - பி.ஆர். பாண்டியன்

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆற்றுப்படுகைகளிலும், விளை நிலப்பகுதிகளிலும் மணல் கொள்ளையால் டெல்டா மாவட்டம் அழிந்து போகும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

pr pandiyan

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,

"காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித் துறையில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்களின் காலிப்பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுப்பணித்துறையின் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக காவிரி டெல்டாவில் தண்ணீரை பகிர்ந்தளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துவரும் நிலையில் மேட்டூர் அணை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. உபரி நீர் கொள்ளிடம் வழியே அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை தூர்வார நடப்பாண்டில் அனுமதிக்கப்படாததால் மழை நீர் வடியாமல் வயல்வெளிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உபரி நீரை வெளியேற்றுவதற்கும், தேவைக்கேற்ப பகிர்ந்தளிப்பதற்கும் முடியவில்லை.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்று படுகைகளிலும், விளை நிலப்பகுதிகளிலும் மணல் கொள்ளை தீவிரமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தாவிடில் டெல்டா மாவட்டங்கள் அழியும் பேராபத்து நிலவுகிறது.

மேலும் பொறியாளர்களும் நியமிக்கப்படாததால் பாசன வடிகால்கள் அழியும் பேராபத்தும் உள்ளது. வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துப் போகும். எனவே பொதுப்பணித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் கொண்ட குழுக்களை கிராமங்கள் தோறும் உருவாக்கி காண்காணித்து பாதுகாக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மணல் கொள்ளையர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் மணல் கொள்ளையை தடுக்க ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் . உயர் நீதிமன்றம் தானே வழக்குப் பதிவு செய்து மணல் கொள்ளைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

மேட்டூரில் தற்போது மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் நூறடி அளவிலான தண்ணீரை அணையில் இருப்பு வைப்பதற்கான நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் வரும் 2020 ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீரை திறந்து குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். இதனை உணர்ந்து அரசு உரிய நடவடிக்கைகளை தற்போதிலிருந்தே தொடங்கிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மேலும் படிக்க:பயிர் காப்பீட்டுத் தொகை விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

ABOUT THE AUTHOR

...view details