திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று(பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
“தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உற்பத்தி நிலையம் உள்ளது. அங்கு 1,2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேறக்கூடிய அணுக்கழிவுகளை ரஷ்யா தானே திரும்ப எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் செய்து அனுமதி பெற்றது.
ஆனால் அணுக்கழிவுகளை திரும்ப எடுத்துச் செல்லாமல் உற்பத்தி நிலைய வளாகத்திற்குள்ளேயே சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேராபத்து ஏற்படும் என அஞ்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் கடிதத்தைப் பிரதமர் ஏற்க வேண்டும்
இந்நிலையில் 3,4ஆவது அணு உலைகளுக்கான உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. அதிலிருந்து வெளியேறக்கூடிய கழிவுகளும் அங்கேயே சேமித்தால் பேராபத்து ஏற்படும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு அணுக்கழிவுகளை மக்கள் வசிப்பிடம் இல்லாத பாலைவனப் பகுதியில் பாதாள கட்டமைப்புகளை உருவாக்கி அதற்குள் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை ஏற்றுச் செயல்பட பிரதமர் மோடி முன்வரவேண்டும். அதுவரையிலும் 3,4 அணு உலைகள் செயல்பாட்டிற்குத் தடை விதிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கேரள ஆளுநரின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானது
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்றும், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் பேசி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவரது செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது மட்டுமின்றி அண்டை மாநில உறவுகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிற நிலையில் இவரது கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவரது கருத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களத்திற்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்
கேரளா தமிழ்நாடு இடையேயான உறவுகளைச் சீர்குலைக்கும் இவரது நடவடிக்கையைக் குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகப் பேசியுள்ள ஆளுநர் முகமது ஆரிப்கானை திரும்பப் பெறக் குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு கடந்த வெள்ளி (18.02.2022) முதல் அணை பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே மசோதா குறித்து பாராளுமன்றத்தில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அணைப் பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் வரும் செய்தி கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் தனிச்சிறப்பு பெற்றது
குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நதிநீர் ஆணையங்களைவிடத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனிச்சிறப்பு பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம். மற்ற ஆணையங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் மட்டும் மத்திய அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்ததையடுத்து உச்ச நீதிமன்றம் தன் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகிறது.
இந்நிலையில் அணைகள் பாதுகாப்பு மசோதா என்கிற பெயரில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படுமா? ஆணையம் அணை பாதுகாப்பு அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுமா? என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:விடிய விடிய மழை... காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள்: வேதனையில் விவசாயிகள்