திருவாரூரில் பெய்த கனமழையினால் வீட்டுக்குள் புகுந்த மழைநீர் திருவாரூர்: திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட 27வது வார்டில் அமைந்து உள்ள ஆத்தாக்குளம் என்கின்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஆத்தாக்குளம் தூர்வாரப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஆண்டுதோறும் கனமழை பெய்யும் போது அப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன. 7) அதிகாலை முதல் இன்று (ஜன. 8) காலை வரை பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. குறிப்பாக திருவாரூரில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 21.செ.மீ., மழைப்பொழிவு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, ஆத்தாக்குளம் போன்ற இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதுமட்டுமின்றி மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "நேற்று (ஜன.7) பெய்த கனமழையினால் ஆத்தாக்குளம் பகுதியில் குளம் நிரம்பி மழை நீர் குடியிருப்புகளுக்குள் சூழ்ந்தது.
இதன் காரணமாக பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வரக்கூடும் என்பதால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தோம். மேலும் அன்றாட பொருட்களை வாங்குவதற்கு கூட கடும் சிரமம் நிலவி வருகிறது. எனவே இந்த குளத்தை முறையாக சீரமைக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ 45 ஆயிரம் செலவில் உருவான மினி ஜீப்.. வியப்பை ஏற்படுத்திய 'வில்லேஜ் விஞ்ஞானி'