திருவாரூர்மாவட்டம் வண்டாம்பாளை பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான அரிசி ஆலையில் நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மாநிலம் முழுவதும் 900 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. டிபிசி ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள்
மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதன் காரணமாக மாநிலம் முழுவதும் டிபிசி-களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி நெல் கொள்முதல்
கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றிய உணவு மட்டும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நெல்லின் ஈரப்பதத்தை 17 லிருந்து 20 விழுக்காடாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுதொடர்பான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட எல்லைகள் தோறும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாநில நெல்கொள்முதல் செய்யப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:ஆன்லைனில் நேரடி நெல் கொள்முதல்: உழவர் எதிர்ப்பு