தமிழ்நாடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தின் வழியாக செல்லக்கூடிய வாஞ்சியாற்று பாசனம் வாய்க்காலானது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தண்ணீர் நிரம்பி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருமிச்சூர், பேரளம் ,கதிராமங்கலம், வாதண்டுர், சங்கமங்கலம் ,பாவட்டக்குடி, வள்ளங்கிளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் வாஞ்சியாற்றில் தான் வடிய வைக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போது வாஞ்சியாற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வடிய வைக்க முடியாமலும் ஆற்றுநீர் வழிந்து விவசாய நிலத்திற்கு புகுந்து விடுவதாலும் நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இது குறித்து பல முறை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் வாஞ்சியாற்று கரையை முறையாக தூர்வாரி கொடுக்காமல் அலட்சியம் காட்டியதால் தான் மழை காலத்தில் ஆற்று நீர் விவசாயத்திற்கு புகுந்து விடுவதாக விவசாயிகள குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வாஞ்சியாற்றை தூர்வாரியும், ஆற்று நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.