திருவாரூர்: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தாது என பாஜக மாநில துணைச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் பாஜக மாநில துணை செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், “ தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். இது பெரும் கண்டனத்துக்குரியது.
மத்திய அரசின் திட்டங்களில் ஆதாரத்துடன் ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசு ஊழல் செய்த அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால், மத்திய அரசு சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தாது
பாஜக மாநில துணைச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கவில்லை. விருப்பமிருந்தால் படித்துக்கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. மும்மொழி கொள்கை இருந்தால் மற்ற மாநிலங்களில் குடிபெயர்ந்து வாழும் தமிழர்கள் பயன்பெறுவார்கள். அதேபோல் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டை ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்லும்” என கூறினார்.