ஒரு நாட்டின் தொன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாகத் திகழ்பவை கட்டடங்களும், அதன் கட்டுமானங்களும்தான். கட்டுமானத்தின் ஆணிவேராகத் திகழ்வது செங்கல். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான செங்கல்சூளைகள் உள்ளன.
இந்தச் செங்கல் சூளைகளை நம்பி லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பு நடத்திவரும் நிலையில் நாகரிகம் வளர வளர இந்தத் தொழிலுக்கு நாளுக்கு நாள் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. திருவாரூர் மாவட்டம் கார்குடி கிராமத்தில் செங்கல்சூளை நடத்திவருகிறார் ஸ்ரீதர். கடந்த 10 வருடங்களாக இத்தொழிலைச் செய்துவரும் இவர் இதில் பல இடையூறுகளைச் சந்தித்து வந்திருத்திருக்கிறார்.
திருவாரூரில் செங்கல் தயாரிப்பு இது குறித்து பேசிய அவர், "அரசு அலுவலர்கள் போதிய ஒத்துழைப்பு தராததால் இதையே தொழிலாக நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நலிவடைந்துவருகிறது. செங்கல் சூளை நடத்துபவர்களுக்கு கனிமவளத் துறை அனுமதி இல்லை. குளங்களில் மண்ணை தூர்வாரக்கூடாது என்று அலுவலர்கள் கெடுபிடி வைத்துவருகின்றனர். எங்களுக்கு மண் அள்ள வழங்கப்படும் உரிமம்கூட புதுப்பித்து தர காலதாமதமாகிறது" என்று கூறினார்.
செங்கல் தயாரிப்புக்கு மூலதனமாக உள்ள சவுடு மண்ணை பெறுவதற்கே இவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். அதற்குப் பிறகு மண் குழைத்தல், குழைத்த மண்ணை செங்கல் வடிவ அச்சில் வார்த்தல், பின்பு அதை வெயிலில் காய வைத்தல், காய்ந்த பிறகு செங்கலை அடுக்கி சுட வைத்தல் இப்படி பல படிநிலைகளுக்கு பிறகு தயாரிக்கப்படும் செங்கல்களை விற்பனை செய்வதற்குள் படாத பாடுபடுவதாகவும் தொழிலாளிகள் தெரிவித்தனர்.
நலிவடைந்துவரும் செங்கல் சூளை தொழில் - சிறப்புத் தொகுப்பு சங்க காலத்திலிருந்து சுட்ட செங்கலைப் பயன்படுத்தியே கட்டடங்கள் கட்டப்பட்டு வந்ததாகத் தற்போதைய கீழடி அகழாய்வுகள்கூட தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிமெண்ட் கல், ஹாலோ பிளாக் கற்கள் வருகையால் செங்கற்களுக்கு மதிப்பு குறைந்து கொண்டேவருகிறது.
இது ஒரு பக்கமென்றால் தற்போது அரசு அலுலர்கள் செங்கல் சூளைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். திரும்புகின்ற இடமெல்லமாம் சிக்கல் இருந்தால் எப்படி செங்கல் வரும்? என்று கூறும் தொழிலாளிகள் தொழிலை ஊக்குவிக்க அரசுக்கு கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை 38 பேர் உயிரிழப்பு: உள் துறை அமைச்சரை நீக்க குடியரசுத் தலைவரிடம் காங். கோரிக்கை