திருவாரூர் மாவட்டம் முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், மாவட்ட வேளாண்துறை சார்பில் வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால், தனியார் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு விவசாயிகள் அறுவடைப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் மணிக்கு 3,000 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு, நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து வேதனையில் உள்ள நேரத்தில், கூடுதலாக கட்டணம் வசூலிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.