இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் .அதில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்துவருவதால் வணிகர்கள் தானே முன்வந்து தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடை திறப்பு நேரங்களைக் குறைத்தும், கடையடைப்பு செய்து அரசுக்குத் துணைபுரிந்துவருகின்றனர்.
கடந்த மூன்று மாத காலமாக காவல் துறையும் நோய்த்தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த உயிரைப் பணயம் வைத்து ஓய்வின்றி செயலாற்றிவருவதைப் பார்த்துவருகிறோம்.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் பொறுப்பற்ற சில காவலர்களால் பொதுமக்கள் விவசாயிகள், வணிகர்கள் தாக்கப்படுவது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகிவருவது வேதனையளிக்கிறது.
இதனையறிந்த காவல் துறை உயர் அலுவலர்கள் காவலர்கள் லத்தியால் அடிக்கக் கூடாது எனவும், வாக்குவாதம் முற்றுமேயானால் உடனடியாக உயர் அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கட்டுப்படாத நிலை இருக்குமேயானால் உரிய வழக்குகள் பதிவுசெய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்திவரும் ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ் இருவரிடமும் கடை அடைப்பது குறித்து காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபமடைந்த காவல் உதவியாளர் உள்ளிட்ட காவலர்கள் தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.