திருவாரூர்: மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, கச்சா எடுக்கிறோம் என்கிற பெயரில் பேரழிவை ஏற்படுத்துகிற திட்டங்களை ஒன்றிய அரசு அனுமதி வழங்கி வந்தது.
இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 10 ஆண்டுகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவந்தோம். இதனை ஏற்று ஒன்றிய, மாநில அரசுகள் திரும்பப் பெற்றன. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்து உரிய அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெளியேறின.
பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டம் வாபஸ்
இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சிட்கோ என்று சொல்லக் கூடிய சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம் தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு செய்து அதற்கான பணிகளில் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறுந் தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது.