மத்திய அரசின் 2020 மின்சார சீர்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி வருகின்ற ஜூன் 5ஆம் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறித்துள்ளார்.
இதுகுறித்து மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது;
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2020 மின்சார சீர்திருத்த வரைவு மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு கொண்டு வரப்படுகிறது. 100 யூனிட் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகைகளையும் அபகரிக்கும் நோக்கமுடையது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மக்களிடமிருந்து பிரிக்கும் அரசியல் பழிவாங்கும் செயல். கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் வன்மம் கொண்டது. குறிப்பாக இந்திய அரசில் பொருளாதார வருவாயில் 35%க்கு மேல் ஈட்டி தருவது தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள்தான். அதற்கு அடிப்படை விவசாயம்தான். விவசாய உற்பத்தி, சாலை மேம்பாடு, மின்சார வசதி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை வகிப்பது தமிழ்நாடு. இதற்கு அடிப்படை திராவிடப் பாரம்பரியம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
உதாரணமாக கரோனா தொற்றால் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் வட மாநிலங்களின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே சாட்சியாக அமைந்துள்ளது. எனவே மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் படலமாக தமிழ்நாட்டை குறிவைத்தே அவசர சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு வளர்ச்சியை வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது 25 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என முயற்சிக்கிறது.