இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சம்பா தாளடி சாகுபடி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பருவம் மாறி பெய்த மழையால் அழிந்துபோனது. நூறு விழுக்காடு பாதிக்கப்பட்டதாக அறிவித்து, அதற்கான முழு இடுபொருள் இழப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
கிட்டத்தட்ட 70 விழுக்காடு விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாகப் பிரித்து நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. 30 விழுக்காடு விவசாயிகளுக்கு இதுவரையிலும் முழுமையான நிவாரணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்குவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அளவில் நிவாரணத் தொகையை ஒருங்கிணைத்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் செய்வது பல்வேறு நிர்வாக சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது. எனவே நிவாரணம் பழைய முறையில் வழங்கிட வேண்டும். அறுவடை முடிந்து மூன்று மாத காலங்களுக்குள் இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சட்டவிதி உள்ளது.