திருவாரூர்:தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள, சத்தியமங்கலம்-திம்பம் மலை வழிப் பாதையில் விலங்குகளைப் பாதுகாக்க இரவு நேர வாகன போக்குவரத்திற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
குறிப்பாக மலைவழிச் சாலைகளில் இரவு நேரங்களில் விலங்குகள் வாகன விபத்தில் சிக்குவதாகவும் விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு
இதனை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை அடுத்து அப்பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக இரவு நேரத்தில் சாலை போக்குவரத்திற்குத் தடைவிதித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
விவசாயிகள் பாதிப்பு
அப்போது அவர், "உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி விலங்குகள் மலைப்பகுதியிலிருந்து வசிப்பிட பகுதிகளுக்கும், சாலைகளுக்கும் இடம்பெயர்வதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாகச் சாலை போக்குவரத்திற்குத் தடைவிதிப்பது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளை அவசரமாக அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.
பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விலங்குகள் இடம்பெயர்வதற்கு அடிப்படை காரணம் மலைகளில் இருக்கிற மரங்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் இரை தேடியும், தண்ணீருக்காகவும் நிலப்பகுதிகளை நோக்கிப் படையெடுக்கின்றன.
இதனை அறிந்துள்ள தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து விலங்குகளைப் பாதுகாப்பதற்கும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும், வனவிலங்குகள் சாலைக்கு வருவதைத் தடுத்து உரிய பாதுகாப்பு வேலிகள் அமைத்துக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுப்பான அரசு செய்ய வேண்டியது
இரவு நேரங்களில் காவல் துறை, வனத் துறை மூலமாகக் குறிப்பிட்ட மலைவழிச் சாலையில் உரிய கண்காணிப்பு, இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வாகன விபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்குத்தான் உள்ளது.
இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருள்களை அறுவடை செய்து அன்றாடம் மாலை வேளைகளில்தான் வாகனங்களில் ஏற்றப்படுகின்றன.
அவ்வாறு ஏற்றப்படும் காய்கறி உணவுப் பொருள்கள், பழ வகைகள் சந்தைகளுக்கு அன்றாடம் இரவு நேரங்களில், நள்ளிரவு, அதிகாலை நேரங்களில்தான் விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியும். வாகன போக்குவரத்திற்கு இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை தடைவிதிப்பதால் அன்றாட விளைவிக்கக்கூடிய காய்கறி பழவகைகள் அன்றாடம் சந்தைக்குச் செல்வது தடைப்பட்டு பேரழிவு ஏற்படும்.
அவசர கால மேல்முறையீடு
இதனை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, விலங்குகள் பாதுகாப்பிற்குத் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று அவசர கால மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் இரவு நேரத் தடையை நீக்கி சட்டப்பூர்வமாக சாலை போக்குவரத்திற்கு அனுமதி பெறுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக நீதிமன்றத்தில் தற்காலிக அனுமதி பெற்று வாகன போக்குவரத்தைச் செயல்படுத்துவதற்கு வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பண்ணாரியில் மேற்கொண்டுவரும் மாபெரும் போராட்டத்திற்குத் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முழு ஆதரவு அளிக்கிறது.
ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்புரவி தலைவர் சுப்பிரமணியன் கெளரவத் தலைவர் அப்பாஜி உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு