திருவாரூர்:நாராயணசாமி நாயுடு 37ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் விவசாயிகள் விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராட்டத் தளபதியாக விளங்கியவர் நாராயணசாமி நாயுடு.
இலவச மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்து தமிழ்நாடு விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு அடித்தளமிட்டவர் நாராயணசாமி நாயுடு. எனவே, அவர் நினைவைப் போற்றும் வகையில் விவசாயக் குடும்பங்கள் தோறும் நினைவஞ்சலியை இன்று செலுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மானியம் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, இலவச மின் இணைப்பு கொடுக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு, இதுவரையிலும் மானியங்கள் வழங்கப்பட்டதே தவிர, மின் இணைப்பு வழங்கப்படவில்லை.