திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கச்சனம், ஆலத்தம்பாடி, விளக்குடி, மணலி, பொன்னிறை, நாகை மாவட்டம் திருக்குவளை, கொக்கலடி உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதை நேற்று (ஆகஸ்ட் 07) தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் முடங்கியுள்ளது. வரும் காலத்தில் முற்றிலும் குருவை கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சாகுபடி அழிந்து போகும்
சம்பா சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை டெல்லியில் நேரில் சந்தித்து கர்நாடக அணைகளை, ஆணையத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் தமிழ்நாட்டில் சாகுபடி அழிந்து போகும் என்று எடுத்துக் கூறினேன்.