திருவாரூர்:ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திருப்பதியில் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இம்மாநாடு தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த ஒத்த கருத்தை உருவாக்க முன்வரவேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முழுமையாக மதித்து செயல்படுவதற்கான நடவடிக்கையை உறுதிப்படுத்திட இக்கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தவேண்டும்.
தென் மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே நீர் ஆதார பிரச்னைகளில் அண்டை மாநிலங்களை முழுமையாக நம்பி உள்ளது. எனவே இம்மாநாடு இதற்கு தீர்வுகாண முழு ஒத்துழைப்பு தர அரசு கோர வேண்டும்.
குறிப்பாக கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் பேரழிவைச் சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது, ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய பருவ மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்க்கிறது.
இதனால் ஆண்டுதோறும் பேரழிவு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பேரழிவுக்காக விவசாய உற்பத்தியை விவசாயிகள் நிறுத்த முடியாது. எனவே, பாதிப்புகளுக்கேற்ப உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியைக் கூடுதலாக ஒதுக்க முன்வரவேண்டும்.
குறிப்பாக காப்பீடு திட்டத்தில் தற்போதைய பேரழிவிற்கு ஏற்ப இழப்பீடு குறித்து முடிவு எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விவசாயிகள் நலன் கருதி மாற்றம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும். மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் பருவகால மாற்றங்களுக்கேற்ப தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அனுமதி பெற வேண்டும்.