கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தன. மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானதுதான். ஆனால், அதன் பிறகான அரசின் நடவடிக்கைகளால் மக்கள் பயன்பெறுகிறார்களா? அரசு நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் அரிசி மக்களுக்கு போதுமானதாகயிருக்கிறதா? அரசு கொடுக்கும் நிவாரணம் போதுமானதா? அரசு தனிக் குழுக்களுடன் இணைந்து விளிம்புநிலை மக்கள் குறித்தும், அவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்தும் தெரிந்துகொண்டதா? இத்தனைக் கேள்விகளுக்கும், விடை ஆம் எனில், மக்கள் ஏன் இன்னும் பட்டினியாகவே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் வாழ்கிறார்கள் என்பதை ’நலமாக இருக்கிறார்கள்’ என்று அரசு கணிக்கிறது, உண்மையில் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள். உதவித் தொகை போதுமானதாகயில்லை, அரசு வழங்கும் அரிசி உண்ணத்தகுந்ததாகயில்லை எனக் கூறும், திருவாரூர் மாவட்டம் மாத்தூர் கிராம மக்களிடம் நாம் பேசினோம்.
பெரும்பாலானோரின் ஏக்கம் ஊரடங்கை விரைவில் தளர்த்த வேண்டும், கால நீட்டிப்பு செய்யக் கூடாது என்பதே. கரோனாவைவிட, பசியின் கொடூரம் தாங்க முடியாததாகயிருக்கிறது, எங்களை வெளியே விடுங்கள் என்கின்றனர் மாத்தூர் குடிசைவாசிகள்.
இது குறித்து ராமாயி என்பவர், “ஊரடங்கால் வெளியே செல்ல முடியவில்லை. கடைகளையும் பூட்டிவிட்டால், எங்குதான் செல்வது? அரிசி, பருப்புகூட இல்லை, கஞ்சியாவது குடிக்கலாம் என்றால், உப்பிற்குக்கூட வழியில்லை.
தெரு வழியாக, வெங்காயம், உப்பு விற்பவர்கள் இப்போது வரவில்லை. பணமில்லாமல் வெளியில் சென்றாலும் மதிப்பில்லை. விலைவாசியை ஏற்றிவிட்டார்கள், 10 ரூபாய்க்கு வாங்கும் பொருளுக்கு 20 ரூபாய் விலை வைத்தால், எங்களைப் போன்ற கூலிகள் எப்படிச் சமாளிக்க முடியும்.
குழந்தைகளுக்கு பால், சர்க்கரையென எதற்கும் வழியில்லாமல், வயிற்றுப் பசியோடு வைத்திருக்கிறோம். வயதான காலத்தில், வெற்றிலைக்கூட வாங்கிச் சாப்பிட வழியில்லை. சில கொழுந்துகளையே, ரூ.10-க்கும் அதிகமாக விலையேற்றினால், என்னதான் செய்ய முடியும். இயலாதவர்களுக்கு உதவுங்க சாமி” என வாழ்க்கையின் கசப்போடு பேசிமுடிக்கிறார்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விளிம்புநிலை மக்களே அதிகமாக வாழ்கின்றனர். அதிலும், தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்துவருகின்றனர்.