தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் உதவி ஆய்வாளருக்கான தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
அதில், திருவாரூர் மாவட்டம் கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளருக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்விற்கு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஆயிரத்து 316 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
கடலூர் மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 959 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நான்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், நான்காயிரத்து 482 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
இதேபோல், சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சக்திகைலாஸ் கல்லூரி, ஏவிஎஸ் கல்லூரி உள்ளிட்ட ஆறு மையங்களில் ஏழாயிரத்து 170 பேர் தேர்வு எழுதினர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, கோபி, பவானி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுமையாக இரண்டாயிரத்து 890 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், இரண்டாயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர்.
காவலர் தேர்வு எழுதுபவர்கள் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு வரும்போது செல்ஃபோன் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் கொண்டுவர முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்துசெல்ல காவல் வாகனம், சிறப்புப் பேருந்து இயக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் தேர்வறையின் வெளிப்புற பாதுகாப்புப் பணிகளில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நடைபெற்ற தேர்வு, பாதுகாப்புப் பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
இதையும் படிங்க:
' காவல் துறை தேர்வுக்கான தேதி மாற்றம்' - விழுப்புரம் எஸ்.பி. விளக்கம்