திருவாரூர்:கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கமலாபுரத்தில் ராஜ்குமார் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆறு பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரவீன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை பிடிக்க முயன்றபோது பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதனால் போலீசார் பிரவீனை முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனை அடுத்து சுடப்பட்ட பிரவீன் மற்றும் காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது பற்றி எஸ்.பி சுரேஷ் குமார் கூறுகையில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கில் தேடப்பட்ட பிரவீனை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் முழங்காலுக்கு கீழ் சுட்டு போலீசார் பிடித்ததாக தெரிவித்தார்.
தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க செல்லும் காவலர்கள் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவது, கைது செய்ய சென்ற போலீசாரை தாக்குவது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வந்தன. ஆலந்தூரில் தவறை தட்டிக்கேட்கச் சென்ற ஆயுதப்படை காவலர் விஜயன் என்பவரை ஒரு கும்பல் தாக்கியதில் பலியானார். எழும்பூரில் காவலர் மீது தாக்குதல், போன்ற சம்பவங்களும் நடந்தன.