திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சங்கமங்கலம் கடகத்தில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவ்வூரின் இடையே ஓடிய நாட்டாற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த கான்க்ரீட் பாலத்தை அலுவலர்கள் இடித்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டிதருவதாக உறுதியளித்துள்ளனர்.
ஆனால் பாலம் இடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் புதிய பாலம் அமைத்துத் தரப்படாததால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சுமார் 5 கி.மீ. தூரம்வரை சுற்றி, பேருந்து நிலையத்திற்கும், குழந்தைகள், பள்ளிகளுக்கும் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மாற்றுப் பாலம் கோரி கோரிக்கை விடுக்கும் நன்னிலம், திருவாரூர் மக்கள் தற்போது அப்பகுதியில் உபயோகப்படுத்தப்பட்டுவரும் மாற்றுப்பாலமான தட்டிபாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் அச்சத்துடன் பாலத்தைக் கடந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த பாலத்தை உபயோகிக்கவே அச்சமாக உள்ளதாகவும், உயிர் பயத்துடன் கடந்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அறுவடைக் காலம் விரைவில் ஆரம்பமாக உள்ளதால், அறுவடை செய்த நெற்பயிர்களைக் கொண்டு செல்வதிலும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வில்சனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!