தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பண்ணை குட்டை திட்டம்! - thiruvarur pannai kuttai

திருவாரூர்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க பயனுள்ளதாக இருக்கும் பண்ணை குட்டையை அனைத்து விவசாயிகளுக்கும் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

farmers
farmers

By

Published : Aug 26, 2020, 3:38 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் பிரதான தொழில் விவசாயம்தான். விவசாயத்தை நம்பித்தான் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியை தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் வேளாண்மை துறை சார்பில் பண்ணை குட்டை அமைத்து தரப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை ஈட்டி, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது.

பண்ணை குட்டை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் வேளாண் துறை மூலம், விவசாயிகளுக்கு அரை ஏக்கர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து தரப்படுகிறது. கோடை காலங்களில் விவசாயிகள் நிலங்களை தரிசாக போடக்கூடாது என்பதற்காகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இத்தகைய பண்ணை குட்டைகள் அமைத்து தரப்படுகின்றன.

விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பண்ணை குட்டை திட்டம்

மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 435 பண்ணை குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்ணை குட்டைகள் மூலம் மழை காலங்களில் நீரை சேமித்து வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பண்ணை குட்டை அமைக்கும் முறை

சுமாா் 45 சென்ட் பரப்பளவில் 30 மீ. (100 அடி) நீளமும், 30 மீ. அகலமும், 2 மீ. (6.6 அடி) ஆழமும் கொண்ட பண்ணை குட்டையை அமைத்தால், அதில் 18 லட்சம் லிட்டா் நீா் அல்லது 63,500 கனஅடி நீா் சேமிக்கப்படுகிறது. இந்த நீரைக் கொண்டு ஐந்து ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிருக்கு 3 அல்லது 4 முறை நீா் பாய்ச்சலாம்.

ஒரு லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பண்ணை குட்டை

பண்ணை குட்டையின் நீளம், அகலம் மற்றும் ஆழத்தை நிலத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். 30 மீ. நீளம், 30 மீ. அகலம், 2 மீ. ஆழம் கொண்ட பண்ணை குட்டை அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. இப்பண்ணை குட்டைகள் 100 சதவீத முழு மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

பண்ணை குட்டை கரையோரங்களில் வளர்க்கப்படும் வாழை மரங்கள்

பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு

பண்ணை குட்டைகளில் தண்ணீர் தொடர்ந்து இருந்து வருவதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பண்ணை குட்டைகளின் நான்கு கரைகளிலும் வாழை, தென்னை, காய்கறிகள், கிழங்கு வகைகள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருமானம் ஈட்ட முடியும். அதே போல், பண்ணை குட்டையில் மீன் வளர்த்தால் கூடுதல் வருமானமும் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு இந்த ஆண்டு 30 விண்ணப்பங்கள் திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து வந்துள்ளன. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வருமானத்தை ஈட்டி தரும் பண்ணை குட்டை

இத்தகைய அதிக பலன்களை தரும் பண்ணை குட்டைகளை அனைத்து விவசாயிகளின் நிலத்திலும் அமைத்து கொடுக்க வேளாண் துறை முன் வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:’பருத்தி கொள்முதல் பணம் இன்னும் கிடைக்கவில்லை’ - விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details