திருவாரூரில், 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து மிதமுள்ள 20 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்த நெற்பயிர்கள் முழுவதும் ஈரப்பதம் அதிகம் காணப்படுவதால் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றாலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
இதனால் 17 சதவீதமாக இருந்து வரும் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு (இந்திய நுகர்பொருள் வாணிபக் கழகம் ) தொடர்ந்து கடிதம் எழுதி கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்ற மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த பின்னர் ஈரப்பதம் குறித்து முடிவு அறிவிக்கப்பட்டும் என கூறினர். இதையடுத்து, மத்திய ஆய்வுக்கமிட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு பணியைத் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறும்போது, குறுவை சாகுபடி பணிகள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. குறுவை சாகுபடியானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் விவசாயிகளின் பாதிப்பை கூறி ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தால் விவசாயிகள் பலன் பெற்றிருப்பார்கள்.