திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆளங்கோட்டை, மேலதிருப்பாளக்குடி கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு கொள்முதலில் ஊழல் முறைகேடுகளை தடுத்து விரைவுப்படுத்தும் வகையில் நடப்பாண்டில் இணையதளம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார். மேலும் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவும், மாவட்டத்திற்கு 10ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்ட பி ஆர் பாண்டியன் மேலும், தற்போது இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் 2 ஆயிரம் சிப்பத்திற்கு நாள் ஒன்றுக்கு நெல் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய இணையதள நடைமுறைகளை பின்பற்றுவதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களால் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் 500 சிப்பத்திற்கும் குறைவான அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யும் நிலை உள்ளதாக கூறினார். இதையடுத்து இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் ஒவ்வொரு கொள்முதல் நிலையம் முன்பும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சிப்பம் வரையிலான நெல் குவியலாக கொட்டி வைத்து எந்த நேரமும் மழை பெய்துவிடுமோ என்ற அச்சத்தில் பரிதாப நிலையில் விவசாயிகள் உள்ளனர் என தெரிவித்த அவர், விவசாயிகளின் பாதிப்பை ஏற்று இணையதள முறையை கைவிட்டு பழைய நடைமுறையை பின்பற்றி உடனடியாக அனைத்து நெல்லையும் குறிப்பிட்ட காலத்திற்குள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம்- முத்தரசன்