திருவாரூர்: நன்னிலம் அருகேவுள்ள குருங்குளம் கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கேசவன். இவரது மனைவி ராதா. குடிசை வீட்டில் தங்களது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இதில், இரண்டாவது மகள் ஷாலினி, பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் படித்து வருகிறார்.
இவர் மாநில, தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்குபெற்று பல சான்றிதழ்கள், பதக்கங்களைக் குவித்துள்ளார். இவர், வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறவுள்ள இந்திய - நேபாள 8ஆவது சர்வதேச இளையோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.
இதனைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஷாலினிக்கு, பெரும் தடையாய் வந்தது பணப் பற்றாக்குறை. வறுமையின் காரணமாக தனக்கு சரியான ஸ்போர்ட்ஸ் ஷூ கூட வாங்க இயலாமல் கிழிந்து போன ஷூவை வைத்து பயிற்சி பெற்று வரும் நிலையில், நேபாளம் செல்வதற்கு வசதி இல்லை என மன வேதனையில் இருக்கிறார்.
வேதனையில் தந்தை
இது குறித்து ஷாலினியின் தந்தை கேசவன் கூறுகையில், “நானும் எனது மனைவியும் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். இதில், பெரும் பகுதியை இரண்டு பெண்களின் கல்விக்காக செலவு செய்து வருகிறேன்.