திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்து தஞ்சம் அடைந்துள்ள 304 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதுபோல, இரண்டாயிரத்து 364 பேர் வெளிநாடுகளிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்கள், அவரவர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
'ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை' திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் தொடர்ந்து, அவர்களில் 13 பேர் 144 தடை உத்தரவைப் பின்பற்றாததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் எங்கு வேண்டுமானாலும் பொருள்கள் வாங்கலாம் என்று ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய சூழல் கருதி ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை, இலவச பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளதாலும், குழப்பம் ஏற்படும் நிலை உருவாகும் என்பதாலும், அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. இத்திட்டமானது, தற்போதைய சூழ்நிலை சரியான பின்னரே, எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அனுமதியின்றி இயங்கிய காய்கறிக் கடைகள்: அப்புறப்படுத்திய நகராட்சி அலுவலர்கள்!