திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 2 லட்சத்து 22ஆயிரத்து 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், நன்னிலம் ஒன்றியப் பகுதியில் இதுவரை எந்த ஒரு வேளாண் துறை அலுவலர்களும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனவும், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனது சட்டப்பேரவைத் தொகுதியான நன்னிலம் பகுதியில் இதுவரை எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் இருந்துகொண்டு இதுபோன்று பேட்டி கொடுத்துவருகிறார் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.