இயற்கை விவசாயம் மீது அதீத பற்று கொண்டவர் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு கிராமத்தில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தார். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர், இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மை சீடராகவும் விளங்கினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்க 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த இயற்கை சிற்பியாகவும் திகழ்கிறார் நெல் ஜெயராமன். விவசாயத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என்றால், இளைஞர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை கையிலெடுக்க வேண்டும் என்று பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டார்.
விவசாயம் ஒரு கலை, அதனை பயிற்சியோடு சேர்ந்த உடல் உழைப்பால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் என்று எடுத்துரைத்தார். பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் அயராது உழைத்த நெல் ஜெயராமன் ஆதிரங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
இவரது பயணத்தில் மைல் கல்லாக விளங்குவது தேசிய நெல் திருவிழா. 2006ஆம் ஆண்டு மே மாத இறுதியில் நடத்தப்படும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து விவரமாக தெரிய வைத்தார்.