தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசியஅளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை; அரசின் உதவியின்றி தவிக்கும் அவலம்! - அரசின் உதவியை நாடும் கால்பந்து வீராங்கனை

'வறுமையிலும் இந்தியாவிற்காக பெருமை தேடிக் கொடுத்தேன். ஆனால், இந்தியாதான் என்னை கண்டுகொள்ளவில்லை' கால்பந்து வீராங்கனையின் வேதனை குறித்த சிறப்புத் தொகுப்பு.

national-footballer-seeking-help-from-the-government-for-job-and-economic-opportunities
national-footballer-seeking-help-from-the-government-for-job-and-economic-opportunities

By

Published : Oct 19, 2020, 5:35 PM IST

Updated : Oct 19, 2020, 10:46 PM IST

விளையாட்டிற்கு அதிக மதிப்பு தரும் நாடுகளில் இந்தியாவிற்குத் தனி இடம் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலும் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இது ஒருபுறமிருக்க விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கான மதிப்பும், மரியாதையும் முறையே கிடைக்கிறதா என்றால், அது கேள்விக்குறி தான்.

அப்படி விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்து வரும் திரூவாருர் கால்பந்து வீராங்கனை ஒருவர், தற்போது அரசின் உதவியின்றி தவிக்கும் சூழலிற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இளம் கால்பந்து வீராங்கனை பவித்ரா

திருவாரூர் மாவட்டம், ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விவாசய தம்பதியர் முருகேசன் - சாந்தி. இவர்களுடைய இளைய மகள் பவித்ரா (19). இவர் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலைப் பயின்று வருகிறார்.

சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, பள்ளிப்பருவத்திலேயே கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார், பவித்ரா. மூன்று ஆண்டுகள் மேற்கொண்ட தீவிரப் பயிற்சியின் விளைவாக, தமிழ்நாட்டின் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் இடம்பிடித்து, தேசிய அளவிலானப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

கால்பந்து பயிற்சி

இதனையடுத்து 2016ஆம் ஆண்டு ஒடிசாவில் அகில இந்திய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற பின்னர், இந்தியா முழுவதிலும் இருந்து சிறந்த வீரர் வீராங்கனைகள் 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பவித்ராவும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, குஜராத்தில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்றார்.

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு தஜகிஸ்தானில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மண்டல அளவிலான கால்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாட பவித்ரா தேர்வு செய்யப்பட்டார். அத்தொடரில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்ற பவித்ரா, தனது அபார ஆட்டத்தின் மூலம் உதவினார்.

நாட்டிற்கு பெருமை சேர்க்க நினைக்கும் கால்பந்து வீராங்கனை

அதே 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்காக மணிப்பூரில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்கேற்று, தமிழ்நாடு கால்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பிடிக்க உதவியாக அமைந்தார். அதன்பின் 2017ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் நடைபெற்ற (south assian food ball fedaration) கால்பந்துப் போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவிற்கு மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனைப் படைத்தார்.

பவித்ரா

இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கால்பந்துத் தொடரில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது. அந்தத்தொடரிலும் தனது அபார ஆட்டத்திறனால் பவித்ரா, பல போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

இப்படி இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் தனது கால்பந்து விளையாட்டுத் திறமையால் பல வெற்றிகளையும், பெருமைகளையும் தேடித்தந்துள்ள பவித்ரா, தற்போது அரசின் எந்தவொரு உதவியும் இன்றி பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்து வருகிறார்.

பயிற்சியின் போது பவித்ரா

இதுகுறித்து பவித்ரா கூறுகையில், "எனது குடும்பம் விவசாயக் குடும்பம் தான். எனது தாய், தந்தை விவசாயக் கூலித் தொழிலாளர்கள். அவர்களின் வருமானத்தை வைத்துக்கொண்டுதான், நான் படித்து வருகிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே கால்பந்துப் போட்டியில் அதிக ஆர்வம் இருந்ததால், நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

விளையாட்டில் பெற்ற பதங்கங்களுடன் பவித்ரா

எனக்கு என்னுடைய பள்ளி ஆசிரியர் ராஜூ சார் பயிற்சி கொடுத்து வந்தார். கால்பந்து மீது கொண்ட தீராத ஆசையால் நம் தமிழ்நாட்டிற்காகவும், இந்தியாவிற்கும் பலமுறைப் போட்டிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளேன். மேலும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டும் இந்தியாவிற்காக இன்னும் பல பதக்கங்களை பெற்றுக்கொடுப்பது தான் எனது லட்சியம், குறிக்கோள்.

ஆனால், இவ்வாறு நாட்டிற்கு பெருமையைச் சேர்த்துள்ள எனக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் எந்த ஒரு உதவியையும் இதுவரை கிடைத்ததில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். அதேபோல் அரசு வேலைவாய்ப்பில் மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை கால்பந்துப் போட்டிகளுக்கும் கொடுத்தால், இன்னும் அது அதிகமான கால்பந்து வீரர்- வீராங்கனைகள் உருவாக வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

ஆசியஅளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை; அரசின் உதவியின்றி தவிக்கும் அவலம்!

விளையாட்டுத் துறையில் சாதனைப்படைக்கும் வீரர்களை தலையில் தூக்கி கொண்டாடும் நாட்டில், நாட்டிற்காக சாதிக்க நினைக்கும் வீரர்கள் மீதும் அரசின் பார்வை விழுந்தால், எதிர்காலத்தில் இந்தியாவின் விளையாட்டுத் துறை பெருமளவு உயரும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று விளையாட்டு வீரர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

இதையும் படிங்க:’தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும்' நடராஜன் தங்கராசு குறித்த சிறப்பு தொகுப்பு!

Last Updated : Oct 19, 2020, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details