தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி கணக்கு ரொம்ப ஈஸி... செயலி மூலம் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் - கணித ஆசிரியர் கணேஷ்

கணக்குப் பாடம் என்றாலே பயந்து ஓடும் மாணவர்கள் மத்தியில், மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி 'INTERACTIVE APP' வகையிலான செயலியை உருவாக்கி, கணக்குப் பாடத்தை எளிமையாக கற்றுக் கொடுக்கிறார், மத்திய அரசின் தொழில்நுட்ப விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர் கணேஷ்.

இனி கணக்கு ரொம்ப ஈஸி
இனி கணக்கு ரொம்ப ஈஸி

By

Published : Jul 4, 2021, 1:54 PM IST

Updated : Jul 5, 2021, 8:09 PM IST

திருவாரூர் மாவட்டம், கிளாரி ஊராட்சியைச் சேர்ந்தவர் கணேஷ், கொரடாச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் படித்து ஆசிரியராக இவர் பணியில் சேர்ந்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்ததால் அரசுப் பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உதவியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று குறிக்கோளுடன் கணேஷ் சிந்தித்து வந்துள்ளார்.

கதைகள், பாடல்கள் மூலம் கணிதம்

அந்த வகையில் எளிய முறையில் கணித பாடத்தை கற்பிக்கும் வகையில், அனிமேஷன் தொழில்நுட்பம் மூலம் பாடங்களை விளையாட்டுகள், கதை கூறுதல், பாடல்கள் என மாற்றி, அவரே உருவாக்கிய INTERACTIVE APP வகையிலான செயலி மூலமாக கற்றுக் கொடுக்கிறார்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தனது இந்த புதுமையான முயற்சியால் மத்திய அரசின் தொழில்நுட்ப விருதுக்கு கணேஷ் தற்போது தேர்வாகியுள்ளார்.

பாடங்களை இவ்வாறு செல்போன் மற்றும் கணினி மூலம் கற்றுக் கொடுப்பதால் மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்கிறார்கள் என்கிறார், ஆசிரியர் கணேஷ்.

இது குறித்து கணினி ஆசிரியர் கணேஷ் பேசுகையில், "மாணவர்களுக்கு கணிதத்தில் அதிக அளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறது. கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்க விளையாட்டுகள், கதை கூறுதல், பாடல்கள் மூலம் வீடியோக்களாக தயாரித்து கற்றுக் கொடுக்கிறேன்.

'கற்கண்டு கணிதம்' என்ற சமூக வலைதளக் குழு ஒன்றை உருவாக்கி, அதில் ஆயிரத்திற்கும் அதிகமான கணித ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, கணிதம் கற்பித்தல் முறை சார்ந்த கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகிறேன்.

6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள புதிய பாடநூலில் இடம் பெற்றுள்ள 'கியூ ஆர்' கோடு கணினிசார் படங்களை தயாரித்து வழங்கியுள்ளேன்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வீடியோக்கள்

விளையாட்டு, பாடல், கதைகள் வழியாக கணிதப் பாடத்தை கற்பித்தலின் மூலமும், கணினி சாதனங்களைப் பயன்படுத்தி கற்பித்தலின் மூலமாகவும் மாணவர்கள் கணிதத்தை எளிமையாக புரிந்து கொள்வதுடன் அந்தத் தொழில்நுட்பத்தையும் ஆர்வமாக தெரிந்து கொள்கிறார்கள்.

கரோனா காலகட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய Geogebra, Robocompas போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள் குறித்து பயிற்சி அளித்தேன்.

பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'க்யூ ஆர்' கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பாடத்திற்கேற்ற வீடியோவிற்குள் நுழைந்து, மாணவர்கள் எளிய முறையில் கற்றுக் கொள்ளலாம். யூ-ட்யூபில் பதிவேற்றம் செய்து நேரடியாகவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்.

இந்த ’க்யூ ஆர்’ கோட்களை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பதிவேற்றம் செய்துள்ளதால், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களும் இதனைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்" என்றும் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

Last Updated : Jul 5, 2021, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details